UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result Tamil Nadu: தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 136 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த முறை 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று (நவம்பர் 11) இரவு வெளியான நிலையில், தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 2,736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்வாகி உள்ளனர்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 136 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. மொத்தம் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல 2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 85ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தின் பங்கு
தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு தேர்ச்சி அடைந்த 155 மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் ஆவர். இதுவே கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது.
அண்மைக் காலமாகவே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்தவண்ணம் இருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்மைத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எழும் கோரிக்கைகள்
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் நேர்காணலிலும் அதிகரித்து, அதிக அளவிலான ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வாக வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.






















