TTSE Exam: தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உதவித்தொகை; தமிழ் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உதவித்தொகை; தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பள்ளி மாணவ, மாணவியர், தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2022-ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கும் திறனாய்வுத் தேர்வு
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் ரூ.1,500
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் இந்த தேர்வின் மூலம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அதாவது 750 அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 750 பேரில் தகுதியான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு முறை எப்படி?
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ் பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகைத் கேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அக்டோபர் 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
* மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
* https://tnegadge.s3.amazonaws.com/notification/TTSE/1725518833.pdf என்ற இணைப்பில் விண்ணப்பப் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே (செப்டம்பர் 19ஆம் தேதி) கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/