TRUST Exam Postponed: மாணவர்களே மறந்துடாதீங்க.. இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு- அரசு அறிவிப்பு
TRUST Exam 2024 Postponed: தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம், அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த TRUST எனப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம், அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION - TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன ஊரக திறனாய்வு தேர்வு?
தமிழ்நாடு அரசு சார்பில், மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதி மாணவர்களுக்காக திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மறறும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாவட்டம்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவ மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும்.
இதற்கிடையே 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எனினும் மழை காரணமாக தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு
இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.