ஐஐடியில் கால் பதிக்கும் தமிழக பழங்குடி மாணவி.. இறந்த தந்தை கனவை நனவாக்கி சாதனை!
அரசு பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஐஐடிக்குச் செல்லும் முதல் பழங்குடி மாணவர் என்ற பெருமையையும் ராஜேஸ்வரி பெற உள்ளார்.

சேலம், கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த பழங்குடி மாணவி ராஜேஸ்வரி, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு இவரின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்த நிலையிலும், விடாப்பிடியாகப் படித்து, சாதித்துள்ளார்.
படிப்பு முக்கியம் பிகிலு
சேலத்தில் இருந்து கல்வராயன் மலைப்பகுதியில் 65 கிலோ மீட்டல் தொலைவில் கருமந்துறை பகுதி உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர். வறுமை மற்றும் அடிக்கடி இடம்பெயர்வது காரணமாக, இங்கு உள்ள மக்கள் அதிகபட்சமாக 8ஆம் வகுப்பு வரையே படிக்கின்றனர்.
இங்குள்ள மலையாளி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. இவரின் மனைவி கவிதா தினக் கூலியாக உள்ளார். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆண்டி, தனது 4 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக பலியான ஆண்டி
தையல் தொழில் செய்து வந்த ஆண்டி, மிகவும் கடினமான சூழலில், குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுத்துள்ளார். இதற்கிடையே ஆண்டி புற்றுநோய் காரணமாக 2024ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். எனினும் அவரின் ஆசையை, நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடிக்குச் செல்லத் தேர்வாகி, நனவாக்கி உள்ளார் மகள் ராஜேஸ்வரி.
பழங்குடிப் பிரிவின்கீழ் அகில இந்திய அளவில் 417ஆம் இடத்தைப் பெற்றுள்ளார் ராஜேஸ்வரி. இவருக்கு ஐஐடி சென்னையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐடிக்குச் செல்லும் முதல் பழங்குடி மாணவர்
அரசு பழங்குடி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஐஐடிக்குச் செல்லும் முதல் பழங்குடி மாணவர் என்ற பெருமையையும் ராஜேஸ்வரி பெற உள்ளார். இதற்கு முன்னதாக ஏராளமான பழங்குடி மாணவர்கள், என்ஐடிக்களில் படிக்கத் தேர்வாகி இருந்தனர்.
10ஆம் வகுப்பில், 500-க்கு 438 மதிப்பெண்களையும் 12ஆம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார் ராஜேஸ்வரி. கணக்கு- உயிரியல் பிரிவை எடுத்த அவர், வேதியியல் மற்றும் கணக்குப் பாடத்தில் சிறந்து விளங்கினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இவருக்கு அரசு நடத்தும் உறைவிடப் பயிற்சி முகாமில், ஜேஇஇ தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















