TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TRB Assistant Professor Result 2026: உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு, தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது- விசிக.

கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளதாக தொடர்ந்து புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.
அதிர்ச்சிக்கு ஆளாக்கிய தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் தேர்வை ரத்து செய்யக் கோரி கோரிக்கை எழுவதாக விசிக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியாகின. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரிக்கை
இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் -முதல் தாளில் ஒருவர் 150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்?
இதையும் வாசிக்கலாம்: வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? இது நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.
நம்பிக்கையே சிதைப்பு
இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























