![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
TNPSC Group 2 Exam 2024 Answer Key: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டது. தவறான விடைகள் இருந்தால், தேர்வர்கள் செப்.30க்குள் முறையிடலாம்.
![TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி? TNPSC Group 2, 2A Exam 2024 Tentative Answer Key is out Objection can be made till Sep 30 know how to appeal TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/24/f8a6dc2db46d7a17d3df8d2283822e0d1727159364781332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 14-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 2,327 இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர்.
இந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தனது இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:
’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -11 (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 14.09.2024 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் (Tentative Key) தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலில் இருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 30.09.2024 மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது’’
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இணைய வழியிலும் பெறப்படாது
செப். 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குப் பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகள் அனைத்தும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
விடைக் குறிப்புகளைக் காண்பது எப்படி?
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட சரியான விடை 'டிக்' குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. தேர்வின்போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண்ணின் அடிப்படையிலேயே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)