Free Coaching: அடடே! டி.என்.பி.எஸ்.சி.க்கான பயிற்சி வகுப்புகள் டி.வி.யில் ஒளிபரப்பு - எப்படி பார்ப்பது?
அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு மாநில அரசுப்பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் தயாராகி வருகின்றனர்.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்:
இந்த போட்டித் தேர்வுகளுக்காக பலரும் பயிற்சி வகுப்புகளில் இணைந்து படித்து வருகின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் பலராலும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவை நடத்தும் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு:
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 9ம் தேதி வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பின்னர், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. நேற்று டி.என்.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளுக்கான இந்திய அரசியலமைப்பு பகுதி 97ம், டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. பொது அறிவியல் தேர்வுகளுக்கான பகுதி 14ம், ஆர்.ஆர்.பி., ஆப்டியூட் பகுதி 54, பி.ஜி. டி.ஆர்.பி. வரலாறு பாடத்தில் பகுதி 25ம் நேற்று பாடமாக நடத்தப்பட்டது.
என்னென்ன பாடங்கள்?
இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுகளுக்கான இந்திய அரசியலமைப்பு பகுதி 98ம், டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. பொது அறிவியல் பாடத்திற்கான பகுதி 15ம், ஆர்.ஆர்.பி. அப்டியூட் பகுதி 55ம், பி.ஜி.டி.ஆர்.பி. வரலாறு பகுதி 26ம் இன்று நடத்தப்பட உள்ளது.
நாளை டி.என்.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுகளுக்கான இந்திய அரசியலமைப்பு பகுதி 99ம், டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. பொது அறிவியல் பாடத்திற்கான பகுதி 16ம், டி.என்.பி.எஸ்.சி. பொது ஆங்கிலம் பகுதி 17ம், பி.ஜி.டி.ஆர்.பி. வரலாறு பகுதி 27ம் நாளை நடத்தப்பட உள்ளது.
வரும் 8ம் தேதி ( நாளை மறுநாள்) டி.என்.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுகளுக்கான இந்திய அரசியலமைப்பு பகுதி 100ம், டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. இந்திய அரசியலமைப்பு பகுதி 7ம், skill up – how do I do it – part 1ம், பி.ஜி.டி.ஆர்.பி. வரலாறு பகுதி 28ம் நடத்தப்பட உள்ளது.
வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான இந்திய அரசியலமைப்பு பகுதி 101, டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. இந்திய அரசியலமைப்பு பகுதி 8ம், skill up – how do I do it – part 2ம், பி.ஜி.டி.ஆர்.பி. வரலாறு பகுதி 29ம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஒவ்வொரு பாடப்பிரிவின் கீழும் வகுப்புகள் 30 நிமிடங்கள் எடுக்கப்பட உள்ளது. இந்த பாடங்களுக்கான பாடக் குறிப்புகளை https://tamilnaducareersservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.