கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை... காரணம் இது தான்!
அனைத்து கல்லூரிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து கல்லூரிகளிலும் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் உணவருந்தும் நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்கள் தவிர மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து கல்லூரிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை; வேறு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்https://t.co/wupaoCQKa2 | #Tamilnadu #AnnaUniversity #Corona | #Masubramanian #TNGovt pic.twitter.com/pptZvuddYS
— ABP Nadu (@abpnadu) December 10, 2021
முன்னதாக, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், விடுதிகளில் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சுழற்சி முறையில் சமூக இடைவெளியுடன் வகுப்பு நடத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திறக்கப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் வட கிழக்குப் பருவ மழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில், சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒரு மாணவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதியில் இருந்த 300 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்