TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Supplementary Exam Date 2025: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN 12th Supplementary Exam Date 2025: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவதற்கான முழு விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு துணைத்தேர்வு
தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியத்தின் கீழ் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மே 9ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட முடிவுகள் ஒருநாள் முன்பே இன்று வெளியாகியுள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக 95.03 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 4.97 சதவிகித மாணவ, மாணவிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் நேர விரயம் ஏதுமின்றி உடனடியாக துணைத்தேர்வுகளை எழுதி, விரைந்து கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
+2 துணைத்தேர்வு எப்போது?
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு, மே 14ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள துணைத்தேர்வுகளுக்கு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தோல்வியடைந்த / தேர்வுக்கு வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்கத் தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும், இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
+2 துணைத்தேர்வு எப்படி விண்ணப்பிக்கலாம்?
12ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத / தேர்வுக்கு வராத மாணவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மீண்டும் எழுத தாங்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 14.05.2025 ( புதன்கிழமை) முதல் 31-05-2025 வரை வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5.௦௦ மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
அதேநேரம், 12ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் 14.05.2025 (புதன்கிழமை) முதல் 31.05.2025 (சனிக் கிழமை ) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம்.
+2 துணைத்தேர்வு அட்டவணை:
12ம் வகுப்பு துணைத்தேர்வு வரும் ஜுன் மாதம் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வி பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த தேர்வுக்கான விரிவான கால அட்டவணை நாளை அதாவது 09-05-2025 அன்று வெளியிடப்பட உள்ளது.





















