![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN 12th Public Exam: இன்று தொடங்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்- இதையெல்லாம் மறக்காதீங்க!
Plus Two Exam 2023 Tamil Nadu: தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று (13.03.2023) தொடங்குகின்றன.
![TN 12th Public Exam: இன்று தொடங்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்- இதையெல்லாம் மறக்காதீங்க! TN 12th Public Exam 2023 Today 8.5 lakh Students to write Plus Two Exam HSC Here is the Last Minute Instructions TN 12th Public Exam: இன்று தொடங்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்- இதையெல்லாம் மறக்காதீங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/12/95be7898bf2d14a4d41380e98d33cb8b1678629822249332_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்துக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று (13.03.2023) தொடங்குகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்
தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக உள்ளது.
3,225 தேர்வு மையங்கள்
மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்குகிறது. 10 மணி முதல் 10.10 வரை வினாத் தாளை வாசிக்க நேரம் அளிக்கப்பட்டுள்ளது. 10.10 முதல் 10.15 வரை தேர்வரின் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதை அடுத்து 10.15 முதல் 01.15 வரை 3 மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெறும். மாணவர்கள் சீருடை அணிந்து உரிய நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். அதேபோல மாணவர்கள் தங்களுடன் பேனா, பென்சில், ஹால் டிக்கெட், ஐடி கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/ இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சந்தேகங்கள், புகார்களுக்கு
தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க, பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை இதைத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் ABP Nadu சார்பில் அன்பு வாழ்த்துகள்..!
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)