(Source: ECI/ABP News/ABP Majha)
TN 12th Exam: பள்ளி பொதுத்தேர்வுகளில் புதிய மாற்றம்?- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள தகவலின்படி, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள தகவலின்படி, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
12ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் தலைமையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தேர்வு அன்றாத மாணவர்களின் விவரத்தைக் கேட்டறிந்து, அதற்கான காரணத்தை தேர்வு நாளன்றே தனியே பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர் மாணவரின் பெற்றோரைப் பிற்பகலில் சந்தித்துப் பேசுவார்.
தேர்வை எதிர்கொள்ள பயம்
மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. கொரோனாவால் ஆல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், பொதுத் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயப்படலாம். மார்ச் 24ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளது'' என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், இடை நிற்றலைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தாலும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் எமிஸில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் அவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார்.
வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம்?
அப்போதே, பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கலந்துகொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, சில நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தாலும் கூட மாணவர்கள் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
பழைய விதிமுறை
ஆண்டுக்குக் குறைந்தபட்சம் இத்தனை நாட்கள் இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற விதிமுறை கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. குறிப்பாக 75 முதல் 80 சதவீத வருகைப் பதிவேடு இருந்தால்தான் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் மாணவர்கள் ஒரு சில நாட்கள் பள்ளிக்கு வந்தாலும்கூட, பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதனால் பள்ளி பொதுத் தேர்வுகளில் வருகைப் பதிவேட்டில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.