(Source: Poll of Polls)
TN 10th Exam 2024: 10ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு கடினம்: தேர்ச்சி வீதம் குறையுமா?- மாணவர்கள் கவலை
10ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதமும் சத எண்ணிக்கையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு வினாத் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 4) 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில், 9.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதமும் சதம் பெறும் நபர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு வினாத்தாள் குறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:
அறிவியல் கேள்வித் தாளின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான எதிர்பாராத கேள்விகள் (Unexpected Questions) கேட்கப்பட்டு இருந்தன. வழக்கமாக இடம் பெறும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளில் பாதிகூடஇந்த முறை கேட்கப்படவில்லை.
ஒவ்வொரு பாடத்திலும் இது முக்கியம் என்று ஆசிரியர்கள் எங்களுக்குக் குறித்துக் கொடுத்த கேள்விகள் எதுவுமே, ஒரு மதிப்பெண் இரு மதிப்பெண்கள், 5 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் கேட்கப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால், ஒரு மதிப்பெண் கேள்விகளில் கூட, புத்தகத்தின் பின்புறம் இல்லாத, புதிய கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதனால் இதனால் எங்களில் சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதே கடினமாக இருக்கும். அதேபோல நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும்.
தொடர்ந்து கடினமாகவே இருக்கும் 10ஆம் வகுப்பு அறிவியல் கேள்வித் தாள்
மற்ற தேர்வுகள் ஓரளவு எளிமையாக இருந்தாலும் எல்லா ஆண்டுகளிலும் 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் மட்டும் கடினமாகவே இருக்கிறது. இதை எங்களின் சீனியர்களும் கூறியுள்ளனர் என்று மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
அடுத்த தேர்வு எப்போது?
இதற்கிடையே 10ஆம் வகுப்புக்கான கடைசித் தேர்வான சமூக அறிவியல் பொதுத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்; மீண்டும் திறப்பு எப்போது?- பள்ளிக் கல்வித்துறை முக்கியத் தகவல்