அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு
கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 ஆயிரம் பேருக்கும் ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 01.08.2021 நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பில் இருந்து 3000 உபரிப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும் அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையருக்கு அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’கணக்கீட்டின்படி கூடுதல் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு, மாணவர்களின் தரமான கல்விக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுவதால் தற்போது பட்டதாரி ஆசிரியர் நிலையில் இயக்குநரின் பொதுத்தொகுப்பில் 4675 ஆசிரியர் இன்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. என்றும் இப்பணியிடங்கள் பல்வேறு காலகட்டங்களில் இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண்
செய்யப்பட்டவை என்றும் தற்போது, முன்னுரிமை அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு 3000 பணியிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3,000 பணியிடங்களை IFHRMS இணையதளத்தில் சேர்ப்பதற்கு இப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு அரசாணையின் நகல்கள், பணியிடம் நிரந்தரமா அல்லது தற்காலிகமா என்ற விவரம் மற்றும் தற்காலிகப் பணியிடத்தின் தொடர் நீட்டிப்பு ஆணையின் நகல் ஆகியவை தேவையென சென்னை தெற்கு சம்பள கணக்கு அலுவலர் தெரிவித்துள்ளதாகவும், பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து நடப்பாண்டில் பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கெனவே வெவ்வேறு அரசாணைகளின்படி, வெவ்வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்து ஒரே அரசாணையாக ஆணை வழங்கும்படி பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவை கவனமாக ஆய்வுசெய்து அதனை ஏற்று, 9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள IFHRMS மூலமாகப் பெற்று வழங்க எதுவாக, இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட வெல்வேறு அரசாணைகளை ஒருங்கிணைத்து அப்பணியிடங்களுக்கு, அப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது’’.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்