MAHER Convocation: மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா: பட்டங்களை பெற்ற 1158 மாணவர்கள்!
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழாவில் விக்சித் பாரத் 2047 நோக்கத்தை செயல்படுத்த நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழாவில் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இது தொடர்பான செய்தி வெளியீட்டு குறிப்பில், “மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) இன்று 17வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியதில் பெருமை கொள்கிறது. இந்நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது. இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனரான தெய்வதிரு. ஏ.என் ராதாகிருஷ்ணனின் தொலைநோக்கு பார்வை தான் MAHER இன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அன்னாரை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் பட்டமளிப்பு விழா தொடங்கியது. MAHER இன் இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி (E.N.T) ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியரும் ஆன பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.
MAHER இன் நிர்வாக வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தனது வரவேற்பு உரையில், 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து இன்று வரை திகழும் இந்நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற பயணத்தைப் பற்றிப் குறிப்பிட்டார். மேலும், தேசியக் கல்வி கொள்கைகளோடு ஒன்றியிருக்கும் MAHER இன் கல்வி கொள்கைகளை பற்றியும் உயர்தர கல்வி வழங்குவதில் MAHER இன் அர்ப்பணிப்பை பற்றியும் விக்சித் பாரத் 2047 நோக்கத்தை செயல்படுத்த நிறுவனத்தின் பங்களிப்பை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
MAHER இன் துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ். நீலகண்டன் இந்நிறுவனத்தின் அங்கீகாரங்கள், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆசிரியர் மேம்பாட்டிற்காகவும் மாணவர் நலனிற்காகவும் எடுக்கப்படும் முனைவுகள், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் நடைபெற்ற வளர்ச்சிகள்,போன்ற முக்கிய சாதனைகளை கொண்ட ஆண்டறிக்கையை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரான பத்மஸ்ரீ. டாக்டர் மோகன் மேஸ்வரனின் உரையும் இடம்பெற்றது. அவர், MAHER இன் தொகுதிக் கல்லூரிகளின் சிறந்த சாதனைப் பதிவு களையும், செயல்பாடுகளையும் அங்கீகார விருதுகளையும் பாராட்டினார். புதிய பட்டதாரிகளுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து எல்லா மாணவர்களுக்கும் நிறைவான வாழ்க்கை அமையும் படி வாழ்த்தினார். விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் MAHER இன் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதுகளைப் பெற்றனர். கூடுதலாக, உட்சுரப்பியல் மருத்துவரும் (Endocrinologist) மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராமுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் Honoris- Causa கெளரவ விருது தரப்பட்டது. மேலும், டாக்டர். நிமல் ராகவன் சுற்றுச்சூழலுக்கான தனது அர்ப்பணிப்பு சேவைக்காக சமூகப் பொறுப்பு விருதைப் பெற்றார். வேந்தர் பட்டமளிப்பு விழா முடிவு பெற்றதாக அறிவித்த பின் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது