குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா; கையில் குழந்தைகளுடன் வந்த மாணவிகள்
குழந்தைகளுடன் வந்த மாணவிகள் தங்களின் பெற்றோர், கணவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு பட்டம் வாங்க மகிழ்ச்சியுடன் மேடையேறினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 2021-22ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான 38 ஆவது பட்டமேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு முன்தினம் 37வது பட்டமேற்பு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரான துணைவேந்தரை அறிமுகப்படுத்திப் பேசினார். விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவர் பங்கேற்று உரையாற்றிப் பட்டச்சான்றிதழ்களை வழங்கினார்.
நாட்டின் வளத்தை உருவாக்கும் கருவி
பின்னர் அவர் பேசியதாவது: அவரவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர்களே பொறுப்பானவர்கள். இந்த பட்டமேற்பு நாள் உங்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் நாளாக அமைய வேண்டும். வேலைவாய்ப்பிற்கான தகுதி அட்டையாக பட்டங்கள் அமையாமல் எதிர்காலத்தை உருவாக்கும் நாட்டின் வளத்தை முன்னேற்றத்தை உருவாக்கும் கருவியாக அமைய வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 1032 இளநிலைப் பட்டங்களும் 231 முதுநிலைப் பட்டங்களும் என மொத்தம் 1263 பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக் கழக அளவில் முதல் தரம் பெற்ற இரு மாணவிகள் உள்ளிட்ட தரம் பெற்ற 26 மாணவிகளுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப் பட்டன. கல்லூரியில் நிறுவப் பெற்றுள்ள அறக்கட்டளைகளிலிருந்து தகுதியான மாணவகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேர்வு நெறியாளர் மலர்விழி, பல் கலைக்கழகப் பேரவை உறுப்பினர் இந்திரா காந்தி துறைத் தலைவர்கள் வைஜெயந்தி மாலா, ரமா பிரியா, கார்குழலி, உஷாதேவி, முத்தமிழ் திருமகள், லெட்சுமி பாலா, வினோபா, அனுராதா, வெள்ளைசாமி, சாந்தி, சந்திரகலா, கயல்விழி, பானுகுமார், இந்திரகலா, தேன்மொழி, சரபோஜி மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் குழந்தை
கடந்த 3 ஆண்டுகளாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தாண்டு ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் பட்டம் வழங்க முடியாது என்பதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இதில் பல மாணவிகளுக்கு திருமணம் முடிந்து தங்களின் கணவருடன் வந்து பட்டம் வாங்கினர். பல மாணவிகள் கையில் குழந்தையுடன் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுடன் வந்த மாணவிகள் தங்களின் பெற்றோர், கணவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு பட்டம் வாங்க மகிழ்ச்சியுடன் மேடையேறினர். தங்களின் அம்மாக்கள் பட்டம் வாங்குவதை கைக் குழந்தைகள் பார்த்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்த பல மரங்களில் தூளிகள் கட்டப்பட்டு குழந்தைகள் தூங்க வைக்கப்பட்டதையும் காண முடிந்தது. எது எப்படியோ பட்டம் வாங்கிட்டேன் என்று பெற்றோரிடம் காட்டிய காலம் போய் தங்களின் கைக்குழந்தைகளிடம் பல மாணவிகள் (அம்மாக்கள்) பட்டத்தை காட்டி மகிழ்ந்ததும் சுவாரஸ்யமாக அமைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவியர் சங்க நிர்வாகிகள் மலர் விழி, அனுராதா, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.