Teachers Day 2023: 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை 75 ஆசிரியர்களுக்கு இன்று (செப். 5) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்குகிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை 75 ஆசிரியர்களுக்கு இன்று (செப். 5) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்குகிறார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகளின் நோக்கம்
தேசிய நல்லாசிரியர் விருதுகளின் நோக்கம் நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும். அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும். ஒவ்வொரு விருதும் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது. விருது பெறுவோர் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கடுமையான மற்றும் வெளிப்படையான தேர்வு முறை மூலம் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்கப்படுகிறது.
விரிவுபடுத்தப்பட்ட விருது முறை
இந்த ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர் கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தேர்வு எப்படி?
விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை, அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது.
புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி, சமூக தொடர்பு மற்றும் பணியில் புதுமை ஆகியவற்றை அங்கீகரிக்க, இணையதள முறையில் பரிந்துரைகள் கோரப்பட்டன. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட மூன்று தனித்தனி தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய நடுவர் குழு அமைக்கப்பட்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்கள்:
மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர், கீழப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாலதி ஆகிய இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று விருதுகளைப் பெற உள்ளனர்.
மேலும் படிக்க: Competency Test: மாணவர்களுக்கு மாதாமாதம் மதிப்பீட்டுத் தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..முழு விவரம்