Tamilnadu staff Vacancies: கவலை அளிக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்; மாணவர்கள் நிலை என்ன? - கல்வியாளர் சங்கமம்
அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் கவலை அளிக்கிறது; புதிதாகச் சேர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களை என்ன செய்வது, என அரசுக்கு கல்வியாளர் சங்கமம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து கல்வியாளர் சங்கமம் கோரிக்கை வைத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் 13,331 ஆசிரியர்களை நியமித்து கொள்ளும் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதனுடைய காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில்
மிகப்பெரிய அளவில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதிலும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கொரோனா காலகட்டத்தில், பல லட்சங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் காலிப்பணியிடங்கள் இவற்றை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த காலிப்பணியிடங்களை மட்டும் கணக்கில் கொண்டு, தொகுப்பூதிய ஆசிரியர் நியமனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டுகளிலிருந்து புதிதாகச் சேர்ந்திருக்கும் கூடிய இந்த லட்சக்கணக்கான மாணவர்களுடைய கல்வியை அரசு கருத்தில் கொள்ளாதது கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மாணவர்களின் எதிர்காலம் என்ன ?
இந்தத் தொகுப்பூதீய ஆசிரிய நியமனங்கள் வரும் கல்வி ஆண்டை பூர்த்தி செய்யுமென்றால், இந்த கல்வியாண்டு முழுமைக்கும் புதிதாக சேர்ந்திருக்கக்கூடிய இந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் என்ன? என்பது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அரசுப் பள்ளிகளின் எதிர்காலம்? பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம்? இங்கு வழங்கப்படுகின்ற கல்வியின் தரம்? இவையாவும் சிறக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த தொகுப்பூதிய நியமனங்களில் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கக்கூடிய அத்தனை மாணவர்களையும் கணக்கில்கொண்டு காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும். அந்த இடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசுக்கு இந்த நேரத்தில் பணிவுடன் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கின்றேன்.
கோரிக்கை:
அத்துடன் TET மற்றும் TRB ல் தேர்ச்சி பெற்று பல்லாண்டுகளாக பணிநியமனம் செய்யாமல் பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு பணிநியமனத்தை தொகுப்பூதியம் என்றாலும் அரசே நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும். வருங்காலத்தில் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கல்வியாளர் சங்கமம் நிறுவனர் சி.சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்