Tamil Pudhalvan Scheme: மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள்? யாருக்கு இல்லை?
Tamil Pudhalvan Scheme: தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் நிதியுதவி யாருக்கெல்லாம் வழங்கப்படும்? என்ன தகுதி? யாரெல்லாம் தகுதி அற்றவர்கள்? என்று பார்க்கலாம்.
தமிழ்ப் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்களின்கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3.28 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
இந்த நிலையில் திட்டத்தின்கீழ் நிதியுதவி யாருக்கெல்லாம் வழங்கப்படும்? என்ன தகுதி? என்று பார்க்கலாம்.
- தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
- வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
- அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 அல்லது 9 அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள்.
வேறு உதவித்தொகை பெற்றாலும் விண்ணப்பிக்கலாம்
- வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும், இத்திட்டத்தில் பயன் பெற தகுதி உடையவராவர்.
- ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
- ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.
என்ன படிப்புகளுக்கு வழங்கப்படும்?
- இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகள் ஆகியவற்றில் சேருபவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- அதேபோல சான்றிதழ் (Certificate Course), பட்டயப் படிப்புகளில் (Diploma) சேர்பவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
யாருக்கெல்லாம் கிடையாது?
- தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
- அதேபோல தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
- மற்ற மாநிலப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய முடியாது.
எதற்காக இந்தத் திட்டம்?
உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கல்லூரி செல்லும் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் உயர் கல்விக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அண்மையில், ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) முதல் இந்தத் திட்டம் கோவையில் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.