TN Policy Note: விளையாட்டு சிறப்புப் பள்ளிகள், அனைத்துப் பாடங்களுக்கும் தனி ஆசிரியர்கள்: கல்வித்துறையின் 26 அறிவிப்புகள் இவைதான்!
விளையாட்டு சிறப்புப் பள்ளிகள், அனைத்துப் பாடங்களுக்கும் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறையின் 26 அறிவிப்புகளையும் இங்கு காணலாம்.
விளையாட்டு சிறப்புப் பள்ளிகள், அனைத்துப் பாடங்களுக்கும் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறையின் 26 அறிவிப்புகளையும் இங்கு காணலாம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் என்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
’’ * 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
* 2ஆவது கட்டமாக ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
* 25 மாவட்டங்களில் தற்போது மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதி ஆண்டில் ரூ.250 கோடியில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
* மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் (Sports School of Excellence) ரூ.9 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
* வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள், தடையின்றி தமிழ் பேசவும் எழுதவும் “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும். இதற்கு சுமார் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள். 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் பள்ளிகளில் குறைந்தது 5 பணியிடங்கள் வழங்கப்படும்.
* மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத பள்ளிகளில் படிப்படியாக 3ஆம் பாடப் பிரிவு உருவாக்கப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மன நலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக அணுகக்கூடிய மின்னுருப் புத்தகங்கள் உருவாக்கப்படும்.
* சிறைச் சாலைகளில் உள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1,249 சிறைவாசிகளுக்கு , அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்படும். இதற்கென ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மாநில எழுத்தறிவு விருது வழங்கப்படும்.
* நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய தமிழ் நூல்கள் அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்.
* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பதிப்பகங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட, குழந்தைகளுக்கான நூல் வரிசைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால்
கொண்டுவரப்படும்.
* காலத்திற்கேற்ப மாறிவரும் கல்விப் பணிகள், மாணவர்களுக்கான நலத்கதிட்டப் பணிகள், கற்பித்தல் சவால்கள், வாசிப்புப் பழக்க மேம்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நோக்கங்கள் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைக்கப்படும்.
* ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும்.ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படும்.
* கன்னிமாரா நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் சிறப்புப் பிரிவுகள் ரூ. 5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* ஆண்டுதோறும் நூலகர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.ரூ.76 இலட்சம் மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேரக் கிளை நூலகங்கள் படிப்படியாக ஆண்டுதோறும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வாசகர்கள் வசதிகேற்ப உரிய தளவாடங்களுடன் புதுப்பிக்கப்படும். முதற்கட்டமாக 20 மாவட்ட மைய நூலகங்களும் 30 முழு நேரக் கிளை நூலகங்களும் மறு சீரமைக்கப்படும்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்புகளை வெளியிட்டார்.