TN Policy Note: வெறுப்பு பிரச்சாரம், தவறான செய்திகளுக்கு எதிராகப் பள்ளிகளில் விழிப்புணர்வு; அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் , தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும் என்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
* 2ஆவது கட்டமாக ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
* 25 மாவட்டங்களில் தற்போது மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதி ஆண்டில் ரூ.250 கோடியில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
* மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் (Sports School of Excellence) ரூ.9 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
* வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள், தடையின்றி தமிழ் பேசவும் எழுதவும் “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும். இதற்கு சுமார் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள். 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் பள்ளிகளில் குறைந்தது 5 பணியிடங்கள் வழங்கப்படும்.
* மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத பள்ளிகளில் படிப்படியாக 3ஆம் பாடப் பிரிவு உருவாக்கப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.