CM Breakfast Scheme: காலை உணவுத்திட்டத்தால் தமிழக பள்ளிகளில் அதிகரித்த மாணவர் வருகை- தெலங்கானா, கனடாவிலும் அமல்!
தமிழக அரசின் காலை உணவுத்திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளதாகவும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 21 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தெரிவித்து உள்ளதாவது:
புரட்சிகரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
குழந்தைகள் காலையில் வீட்டில் உணவு உண்ணாமலேயே பள்ளிக்கு வருகிறார்கள் என்பதைப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கூறக் கேட்டு அறிந்த முதலமைச்சர், உடனடியாக உருவாக்கிய திட்டம் காலை உணவுத் திட்டம்.
முதலமைச்சரின் இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து 31,008 அரசுத் தொடக்க நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் 18.54 இலட்சம் மாணவ, மாணவியர் இன்று பள்ளி வந்ததும் சூடான, சுவையான காலைச் சிற்றுண்டியை உண்டு படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.
காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சியோடு இத்திட்டத்தை வரவேற்று முதலமைச்சரை வாழ்த்துகிறார்கள். இத்திட்டத்தால் பள்ளிக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தை, இந்தக் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும், இத்திட்டம் இந்த ஆண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவிலும் நடைமுறை
இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்றுத் தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். உண்மையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த மகத்தான திட்டம் கல்வித்துறை வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சித் திட்டமாகப் போற்றப்படுகிறது.