அனைத்து கல்லூரிகளிலும் மாணவிகளுக்கென தனி ஓய்வறை; 3 வாரத்தில் நிதி ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக தலா 5 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட 8 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காட்சிப் பொருளாக இருக்கும் சானிட்டரி நாப்கின்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் சானிட்டரி நாப்கின்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு கடந்த செப்.12 மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ’’2017- 18ஆம் ஆண்டு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 89 கல்லூரிகளில் பொருத்தப்பட்டுள்ளது. அவை பழுதடைந்தால் சரி செய்து முழுமையாக செயல்படச் செய்ய வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.8.55 கோடி நிதி ஒதுக்கீடு
அத்துடன் அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக தலா 5 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட 8 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
3 வார அவகாசம்
அதையடுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, வழக்கை நீதிபதிகள் செப்.26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மீண்டும் வழக்கு இன்று (செப்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க 8.55 கோடி ரூபாயை 3 வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.