Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table 2024: வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் தொடங்கி, முடிவுகளும் வெளியாகும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
![Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு Semester Exam Time Table 2024 Tamil Nadu Arts Science Madras University Kamaraj University Bharathiar University Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/043702cef70425530c3ff6956ac896121719925649138333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் 31-ல் தொடங்கப்பட்டு, நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
’’தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அவை இணைவு பெற்ற பல்கலைக்கழகங்கள் வாயிலாகக் கல்லூரிக்குக் கல்லூரி மாறுபடும் வகையில் கல்லூரி வேலை நாள்கள், தேர்வு நாள்கள் மற்றும் பருவ விடுமுறை ஆகியன கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் பருவத் தேர்வுகள் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் நடத்தப்படுகின்றன.
இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுவதோடு, பாடத்திட்டம் சாராமல், மாணாக்கர்களுக்குப் பயன்தரும் பிற நிகழ்வுகளைக் கல்லூரிகளுக்குள்ளும் வெளியிலும் நிகழ்த்தத் திட்டமிடுவதில் தேவையற்ற குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் நிலவுகின்றன.
தாமதமாக வெளியிடப்படும் தேர்வு முடிவுகள்
மேலும், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடத் தேர்வுகள் வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்குட்பட்ட வெவ்வேறு கல்லூரிகளில் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற இடைவெளிகளில் நடத்தப்படுவதாலும், தேர்வு முடிவுகள் மிகத் தாமதமாக வெளியிடப்படுவதாலும் முதுகலை மற்றும் முதுஅறிவியல் மாணவர் சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்களும் பெற்றோரும் தொடர்ந்து மனப்பதற்றத்திலேயே தவித்திருக்கும் சூழல் நிலவுகிறது. மேற்கல்விக்கும் பணி வாய்ப்புகளுக்கும் குறித்த காலத்திற்குள் மாணவர்கள் செல்ல முடியாத நெருக்கடியும் உருவாகிறது.
இவற்றைத் தவிர்ப்பதற்குப் பெரிய இடைவெளிகள் இல்லாத பொதுவான வரைவுக் கால அட்டவணை (Tentative Time Schedule) தேவைப்படுகிறது. இத்தேவையை உளங்கெொண்டு, மேற்குறித்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றத்தக்க வகையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான வரைவுக் கால அட்டவணை (Tentative Time Schedule) தயாரிக்கக் கல்வியாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களது பரிந்துரையின்அடிப்படையில் ஒரு பொதுவான வரைவுக் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
வரைவுக் கால அட்டவணை
நான் முதல்வன், தேசிய மாணவர் படை, நாட்டுநலப் பணித் திட்டம், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பட்டமளிப்பு விழா முதலிய பல்வேறு நிகழ்வுகளையும் கட்டுக்கோப்பாக ஒழுங்கமைத்துக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சீராகவும் செம்மையாகவும் 2024-25ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துவதற்கு அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வரைவுக் கால அட்டவணை, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு/அரசு உதவி பெறும் /சுயநிதிக்கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் உரிய முறையில்விவாதித்து அவர்களின் கருத்தறிந்து உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 2024-25ஆம் கல்வியாண்டிற்கு வெளியிட்டுள்ள முன்மாதிரிக் கால அட்டவணையைக் கருத்தில் கொண்டும்அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வரைவுக் கால அட்டவணை அனுப்பப்படுகிறது.
பல்கலைக்கழகத் தேர்வுத் துறைகளும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்நலன் கருதி இக்கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்’’.
இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)