Schools, Colleges Reopen: 10 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவர்களுக்கு பாதிப்பு.. கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்..
வெள்ளத்துக்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை, டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறையைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 10ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் பாதிப்பை அடுத்து, 10 நாட்களுக்குப் பிறகு இன்று (டிசம்பர் 11) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, இயங்கத் தொடங்கியுள்ளன. மழை வெள்ளத்தால் பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பைகளை இழந்த மாணவர்களுக்கு, வழங்க இன்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது. புயலால் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின. அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
10 நாட்கள் விடுமுறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ள பாதிப்பால் விடுமுறை தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
வெள்ளத்துக்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை, டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறையைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 10ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த இடைவெளியில் பள்ளி, கல்லூரிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள்திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்றவற்றை வழங்க இன்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றைக் கண்டறிந்து, நாளை (செவ்வாய்க்கிழமை- 12.12.2023) பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு
ஏற்கெனவே, இன்று (11.12.2023) அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குவதாக இருந்த நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
கல்லூரிகளும் திறப்பு
பள்ளிகளைப் போல கல்லூரிகளும் 4 மாவட்டங்களில் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று செமஸ்டர் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், இன்று (டிசம்பர் 11ஆம் தேதி) தொடங்கி உள்ளன. முன்னதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் 20 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.