120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: யாருக்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு ரூ.39.20 இலட்சம் கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு ரூ.39.20 இலட்சம் கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (HDFC Bank CSR Fund) வழங்கப்பட்ட 39 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை வழங்கிடும் அடையாளமாக 12 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஆற்றங்கரை ஓரங்கள், சாலை ஓரங்கள் மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய பகுதிகளில் வசிக்கின்ற குடும்பங்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை எளிய குடும்பங்களுக்கு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தி வருகிறது. இந்த வாரியத்தின் நோக்கம் குடியிருப்புகள் வழங்குவது மட்டுமல்ல. அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் குழந்தை நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள், நூலகங்கள், ஆவின் பாலகங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் வாரியத்தால் அரசின் பிற துறைகளின் ஒருங்கிணைப்புடன் வழங்கப்படுகின்றன. மேலும், வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிற சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் மாணவ / மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கல்வி உதவித் தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 141 மாணவ, மாணவியர்களுக்கு எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் 42 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த வருடமும் மருத்துவம், பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு (CSR) நிதியின் கீழ் வாரிய திட்டப்பகுதிகளான கோவிந்தசாமி நகர், கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், எம்.எஸ். நகர், கே.பி.பார்க், நொச்சி நகர், அகில இந்திய வானொலி திட்டப்பகுதி, வெங்கடாபுரம் திட்டப்பகுதி, நொச்சிக்குப்பம், அத்திப்பட்டு திட்டப்பகுதி, நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம், பருவாநகர் திட்டப்பகுதி, தாழங்குப்பம், டி.டி. பிளாக், என்.வி.என் நகர், புஷ்பா நகர், ராணி அண்ணா நகர் திட்டப்பகுதி, டோபிக்கானா, காசிமேடுக் குப்பம், சிங்கார வேலன் நகர், காந்தி நகர், பெரிய கூடல் நகர், மங்களபுரம், காமராஜபுரம், பச்சைகல் வீராசாமி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, லாக் நகர், சேத்துப்பட்டு அப்பாசாமி தெரு, திருவல்லிக்கேணி, கோதாமேடு, டோபிக்கானா, கொத்தவால்சாவடி ஆகிய திட்டப்பகுதிகளில் மொத்தம் 120 மாணவ, மாணவியர்களுக்கு 39 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் 12 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., எச்.டி.எப்.சி (தமிழ்நாடு மற்றும் கேரளா) வங்கி தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி, வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.ஏ.நிர்மல்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.