RTE Act: இந்தப் பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி..
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசாகூட செலுத்த வேண்டியதில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசாகூட செலுத்த வேண்டியதில்லை என்றும் அரசே அவர்களுக்குரிய புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்துக்குமான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் கல்விக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.
பின்னணி என்ன?
எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேரும் தனியார் பளிளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசமாகும். எனினும் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசு செலுத்துவதில்லை.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தின் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு, அவரின் பெற்றோர் ரூ.11,700-ஐக் கட்டணமாகச் செலுத்தினர். எனினும் சீருடை, புத்தகம், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக ரூ.11,977 செலுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவியைச் சேர்த்த வேலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வெளியிட்டுள்ள உத்தரவில், ’’ஆர்டிஇ சட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்கள் படிக்க ஒரு பைசா கட்டணத்தைக் கூட செலுத்த அனுமதிக்கக்கூடாது. அது அரசின் கடமை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆர்டிஇ சட்டப்பிரிவு 12 (2)-ன் படி, விளிம்புநிலை மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, இலவமாகக் கல்வி வழங்குவது மாநில அரசின் கோட்பாடுகளின்கீழ் முக்கியமான கடமையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்ந்த தந்தைக்கு சீருடை மற்றும் பாடநூல் கட்டணமாக ரூ.11,977 அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.