(Source: Poll of Polls)
34 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? சுகாதாரத் துறைக்கு என்ன ஆச்சு? எழும் கண்டனங்கள்!
தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. - டிடிவி தினகரன்.

பேராசிரியர் பற்றாக்குறையால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி தவிர எஞ்சிய 34 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய அளவிலான பேராசிரியர்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் அதிகபட்சமாக 95 சதவீத பேராசிரியர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பொது மருத்துவம், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் என பொது மக்களுக்கு அதிகளவு தேவைப்படும் துறைகளுக்கான பேராசிரியர்களே பற்றாக்குறையாக உள்ளது.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘’ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதமும், இதே காரணங்களுக்காக, புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை.
தற்போது 34 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய் விடும். ஆனால், தினமும் வீண் விளம்பர நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் குடும்பத்தினருக்கு யார் சிறந்த பணியாளாக இருப்பது என்ற மற்ற அமைச்சர்களுடனான போட்டியில், முதல் வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவைப் பறிகொடுக்க முடியாது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’பேராசிரியர்கள் பற்றாக்குறை, குறைவான வருகைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய கால அவகாசத்திற்குள் 24 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை வழங்க தவறியிருப்பதால் அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பிருப்பதோடு அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையின் சுகாதாரமற்ற நிலை
கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத் துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
என்ன காரணம்?
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கத் தவறியதே மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதிலை உடனடியாக அளிப்பதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என சுகாதாரத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்’’ என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.






















