PM YASASVI Scheme 2022: பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்; நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்..
இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் தகுதித் தேர்வு 25.09.2022 அன்று நடைபெற உள்ளது.
YASASVI எனப்படும் இந்தியாவின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகையை வழங்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப். 5ஆம் தேதி கடைசி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம்.
இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் தகுதித் தேர்வு 25.09.2022 அன்று நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெற உள்ளது. கணினி வழியில் நடைபெறும் தேர்வுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 5ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மாணவர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
இது 9 வது வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. வருமானச் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
என்ன தகுதி?
இந்தத் திட்டத்தில் இதர பிற்பட்டோர் (OBC), பொருளாதார ரீதியாக பிற்பட்டோர் (EBC), சீர் மரபினர் (DNT) ஆகிய மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர்வை எழுத முடியும். எனினும் தேவையான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் - 01-04-2006 முதல் 31-03-2010 வரை பிறந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
11ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் - 01-04-2004 முதல் 31-03-2008 வரை பிறந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
ஆண்டுதோறும் ரூ.4,000 தொகை உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு முறை
கணிதத்தில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல அறிவியலில் இருந்து 20 கேள்விகளுக்கு 80 மதிப்பெண்களும் சமூக அறிவியலில் இருந்து 25 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 5 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆக மொத்தத்தில் 100 கேள்விகளுக்கு 400 மதிப்பெண்கள்.
நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் இல்லை. தேர்வு கணினி வழியில் 3 மணி நேரம் நடைபெறும்.
தேர்வு மொழி
இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேட்கப்படும்.
9ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 8ஆம் வகுப்புப் பாடத் திட்டமும், 11ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 10ஆம் வகுப்புப் பாடத் திட்டமும் கணக்கில் கொள்ளப்பட்டு, கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு மையங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாணவர்கள் விண்ணப்பிக்க: https://yet.nta.ac.in/c/register/ என்ற பக்கத்தை க்ளிக் செய்து முதலில் முன்பதிவு செய்துகொள்ளவும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://yet.nta.ac.in/static/pdf/YASASVI_2022_INFORMATION%20BULLETIN.pdf என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்து படிக்கவும்.
தொலைபேசி எண்கள்: 011 4075 9000 அல்லது 011 6922 7700