PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
Minister Rajmohan on PM Shri Scheme: 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. அது மிகப்பெரிய துயரம். மாணவர்களுக்கான நிதியை நிறுத்திவைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது- அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. வளாகம், SCERT, SIEMAT கருத்தரங்கக் கூடத்தில் இன்று (19.05.2026) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாநில அளவில் புதிய பாடநூல்களுக்கான அறிமுகப் பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’1 - 3ஆம் வகுப்புக்கான பாடத் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சியை இன்று முதல் வழங்க உள்ளார்கள். இங்கு வந்துள்ள ஆசிரியர்கள், மாவட்டங்களில் பணியாற்றும் பிற ஆசிரியர்களுக்குச் சென்று பயிற்சி அளிப்பார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து கல்விக்கான நிதி வரவில்லை. அது மிகப்பெரிய துயரம். அது எனக்கான நிதியோ, ஆசிரியர்களுக்கான நிதியோ அல்ல. அது மாணவர்களுக்கான நிதி. அந்த நிதியை நிறுத்திவைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கொள்கையில் சமரசம் இல்லை
இருமொழிக் கொள்கை என்பது தவெகவின் கொள்கை. அந்த கொள்கையில் எந்தவித சமரசம் இல்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் எவ்வித மறைமுக அழுத்தத்துக்கும் அடிப்பணிய மாட்டோம்.
எந்த வித பள்ளிகள் என்றாலும் வாகனங்களை பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை. ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்























