குறைந்த விலையிலாவது ஒரு ஸ்மார்ட் போன் வாங்குங்க! - பெற்றோர்களை அலெர்ட் செய்யும் பள்ளிக் கல்வித்துறை
எமிஸ் தளத்தில் உள்ள 1.25 கோடி மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தினசரி செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாணவர்களின் செயல்பாடுகளைப் பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் மூதல் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, மாணவர்கள் தொடர்பான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் உள்ளடக்கியது எமிஸ். இது ஒரு கல்வி மேலாண்மை தகவல் மையம் ஆகும். அதேபோல ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படுகின்றன. இதற்கிடையே அரசின் நலத்திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் வழியாக புதிய தளத்தை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
1.25 கோடி பேரின் செல்போன் எண்கள் சரிபார்ப்பு
இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள 1.25 கோடி மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளைத் திறக்கும் முன்னர் இதை முடித்துவிட வேண்டும் என்று கல்வித் துறை செயலாற்றி வருகிறது.
தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை பள்ளிக் கல்வித்துறை சரிபார்த்துள்ளது. இந்த மாதத்திற்குள் மீதமுள்ள மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொடர்பு எண்ணைக் கல்வித்துறை சரிபார்க்கும் போது ‘ஓடிபி’ எனும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போனுக்கு வரும் ‘ஓடிபி’ எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாகத் தகவல் வெளியானது. கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் விளக்கம்
இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் அச்சத்தை தவிர்க்கும் விதமாக, அவர்களைத் தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அரசின் நலத் திட்டங்களை தெரிவிப்பதற்காகவே தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்படுகிறது என்றும் மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குமர குருபரன் தெரிவித்து இருந்தார்.
அலுவலக உதவியாளர்கள் நியமனம்
இதற்கிடையே எமிஸ் வழியாக மாணவர்கள், நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை உள்ளிட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.
எனினும் இதுதொடர்பான பணிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து எமிஸ் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.