7ஆண்டுகளில் ஒருமுறை கூட நீட் தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை; மத்தியக் கல்வி அமைச்சர் திட்டவட்டம்
கடந்த 7 ஆண்டுகளாக 70 முறை நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஒருமுறை கூட வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசியலுக்காகவே எதிர்க் கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
’’கடந்த 7 ஆண்டுகளாக 70 முறை நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஒருமுறை கூட வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை. தேசியத் தேர்வுகள் முகமை 240-க்கும் மேற்பட்ட தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. 5 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏராளமான தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, 4.5 கோடி மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்வை எழுதியுள்ளனர். நீட் தேர்வு அவசியம் என்று 2 முறை உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு அமைக்கப்பட்ட 4,700 மையங்களில், பாட்னாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளது. அங்கு காவல்துறையும் சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது.
நீட் தேர்வைக் கொண்டுவர முடிவு செய்தது யார்?
2010ஆம் ஆண்டு யார் ஆட்சியில் இருந்தது? நீட் தேர்வைக் கொண்டுவர முடிவு செய்தது யார்? நீட் தேர்வு வேண்டும் என்று உச்ச நீதிமன்றே தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு மசோதாவை ஏன் காங்கிரஸ் கொண்டு வரவில்லை? தற்போது நடைபெற்ற சிறு சிறு தவறுகள் கூட இனி வருங்காலத்தில் நடைபெறாது என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.