NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
NEET UG Result 2024 Topper: நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில், 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் நடத்தப்பட்டது. கடந்த மே 5-ம் தேதி நடந்த இந்தத் தேர்வை எழுத 24,06,079 பேர் விண்ணப்பித்த நிலையில், 23,33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் நேற்று இரவு வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 56.41% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும்.
தமிழக மாணவர்கள் 8 பேர் முதலிடம்
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் நிலையில், நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று, சதமடித்துள்ளனர். 67 பேரும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் 8 பேர் 720 மதிப்பெண்களுக்கு 720 பெற்றுள்ளனர். குறிப்பாக சையது ஆரிஃபின் யூசுப், ஷைலஜா, ஆதித்யா குமார் பண்டா, ஸ்ரீராம், ரஜனீஷ், ஜெயதி பூர்வஜா, ரோஹித், சபரீசன் ஆகிய 8 பேரும் 99.997129 பர்சன்டைலைப் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகள் குறித்த விரிவான அறிவிக்கையைக் காண: https://exams.nta.ac.in/NEET/images/press-release-for-the-result-declaration-of-the-neet-ug-2024-revised-as-on-04-june-2024-without-marks.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NEET/