NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE தேர்வுகள் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

NEET, JEE Exam: பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பரிசீலனை
நீட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் நடைபெறும் முக்கியமான படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகளில், இனி பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும் 50 சதவிகிதம் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் அல்லது பொதுத்தேர்வுகள் என எந்தவொரு தேர்விலும் உள்ள அதிகப்படியான அழுத்தத் தன்மையைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனவாம். விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவுகள் உட்பட, தேர்வு முறையில் நிகழ்ந்த தொடர்ச்சியான முறைகேடுகள், அந்த முறையின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள் சொல்வது என்ன?
மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களானது, “சேர்க்கை/தகுதி அடிப்படையில் பொதுத்தேர்வு தேர்வு மதிப்பெண்களுக்கு 50 சதவிகித முக்கியத்துவம் அளிப்பது, பயிற்சி மையங்களை சார்ந்து இருப்பதை குறைப்பது மற்றும் பலமுறை தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது, நுழைவுத் தேர்வுகளைப் பள்ளிப் பாடத்திட்டங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பது மற்றும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய கணினி அடிப்படையிலான தேர்வுகளை நோக்கிப் படிப்படியாக மாறுவது ஆகியவை பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிடுகின்றன. தற்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளானது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளுக்குத் தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் பொதுத்தேர்வுகளில் குஏறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அரசிடம் அறிக்கை
மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருப்பது, போலிப் பள்ளிகளின் பரவல் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நுழைவுத் தேர்வுகளில் உள்ள நேர்மை ஆகியவற்றை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட கல்வி அமைச்சகத்தின் ஒன்பது பேர் கொண்ட குழுவானது புதிய சீர்திருத்தங்களை பரிசீலித்து வருகிறது. குழுவின் இறுதி அறிக்கை வரும் வாரங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. அதில், நுழைவுத் தேர்வுகளைப் பள்ளிப் பாடத்திட்டங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
எளிதாகும் மாணவர் சேர்க்கை..!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாக உள்ளது. அதவாது மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும்போது பள்ளி பொதுதேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் எந்த விதத்திலும் கருத்தில் கொள்ளப்படாது. இதேபோன்று ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான சேர்க்கை, முழுவதும் ஜேஇஇ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படுவதில்லை.
மேற்குறிப்பிடப்பட்ட காரணத்தால், பயிற்சி மையங்களுடன் தொடர்பில் உள்ள் ஏதேனும் ஒரு பள்ளியில் மாணவராக பதிவு செய்துகொண்டு, முழு நேரமும் நுழைவுத்தேர்வுக்கு தயாராகவே நேரத்தை செலவிட்டு வருவது அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களி தடுக்கும் வகையில், இனி நீட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், இனி பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும் 50% முக்கியத்துவம் அளிக்கலாம் என மத்திய அரசு பரிசீலிக்கிறதாம்.
ட்ரெண்டிங் செய்திகள்























