NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுத உள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுத உள்ளார்.
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தரும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள் நமது மனச்சாட்சியை உலுக்கி வருகின்றன.
ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அவர்தம் பெற்றோரின் கனவுகளை எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார் நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார். தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர். தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர்.
ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் 'அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பது போல உள்ளது இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.குடியரசுத் தலைவர் அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.