National Award To Teachers 2024: இன்னும் சில நாட்கள்தான்; நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இப்படித்தான்!
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
![National Award To Teachers 2024: இன்னும் சில நாட்கள்தான்; நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இப்படித்தான்! National Award To Teachers 2024 Applications till June 20 Check Details To Apply National Award To Teachers 2024: இன்னும் சில நாட்கள்தான்; நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? இப்படித்தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/07/82f748aace4e5eafe27d6b7b9d8db2f01717730250406798_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இப்படியான நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் 35 பேருக்கு நல்லாசிரியர் விருது
உயர் கல்வித்துறையைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 35 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை மற்றும் அறிவியல், பொறியியல், சட்டம், வணிகம், மேலாண்மை, அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 25 விருதுகளும் பாலிடெக்னிக் பிரிவு ஆசிரியர்களுக்கு 10 விருதுகளும் வழங்கப்படுகின்றன.
என்ன தகுதி?
* குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக முழு நேரமாகப் பணிபுரிந்திருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை அளவில் பணிபுரியலாம்.
* எனினும் கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணை வேந்தர்கள் யாரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.
* ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பத் தகுதியானவர்கள் அல்ல.
* விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு 55 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
* ஜூன் 20ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விருது விவரம்
* தேசிய நல்லாசிரியர் விருது,
* சான்றிதழ்,
* ரூ.50 ஆயிரம் ரொக்கம்
விண்ணப்பிப்பது எப்படி?
ஆசிரியர்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்திசெய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தலைவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு, விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் டெல்லிக்கு நேரில் அழைக்கப்பட்டு, செப்டம்பர் 4ஆம் தேதி ஒத்திகை நடைபெறும். அடுத்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/1857412_NATIONAL-AWARD-TO-TEACHERS.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.
அதேபோல https://awards.gov.in/Home/AwardLibrary என்ற இணைப்பிலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உதவி எண்: 01129581120
இதுகுறித்த அறிவுறுத்தலையும் யுஜிசி அண்மையில் வெளியிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)