National Achievement Survey 2021: கொரோனாவுக்கு பிறகு நாடு முழுவதும் குறைந்த கல்வியறிவு.. எச்சரிக்கும் ஆய்வு!
நாடு முழுவதும் 720 மாவட்டங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளின் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021 அளித்துள்ள தரவுகளுள் முக்கியமானவற்றை இங்கே வழங்கியுள்ளோம்...
தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021 என்ற அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதைவிட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வியறிவு குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை `தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021’ பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 720 மாவட்டங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளின் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021 பல்வேறு தரவுகளை அளித்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றை இங்கே வழங்கியுள்ளோம்...
மூன்றாம் வகுப்பு:
கணிதம், மொழி ஆகிய திறன்களும், சுற்றுச்சூழல் குறித்த நேரடி புரிதல் ஆகியவையும் சோதனை செய்யப்பட்டன. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேர்வில் கிடைத்துள்ள மதிப்பெண் கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய சாதனை கணக்கெடுப்பு தரவுகளில் உள்ள தேசிய சராசரி மதிப்பெண்ணுக்கும் குறைவானதாகும், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, கணிதப் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்த போதும், மொத்த மதிப்பெண்கள் குறைவாக கிடைத்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களையும், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் இறுதி மூன்று இடங்களையும் பெற்றுள்ளன.
ஐந்தாம் வகுப்பு:
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கணிதம், மொழி ஆகிய திறன்களும், சுற்றுச்சூழல் குறித்த நேரடி புரிதல் ஆகியவையும் சோதனை செய்யப்பட்டன. இந்த மதிப்பெண்களும் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்தப் பட்டியலிலும், கடந்த 2017ஆ ஆண்டு இருந்த தேசிய சராசரி மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்களாக பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தெலங்கானா, மேகாலயா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ள மாநிலங்களாக இடம்பெற்றுள்ளன.
எட்டாம் வகுப்பு:
மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் புரிதல் திறன் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் தேசிய சராசரியை விட அதிகமான மதிப்பெண்களைப் பெற்று பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்கள் முதல் இடங்களைப் பிடித்துள்ளன. குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்களாக மேகாலயா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பல்வேறு குறியீடுகளின் மூலமாக, வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறன் இந்தத் தேர்வுகளின் சோதனை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய அளவிலான பத்திகளை வாசிக்கக் கூறி, அவற்றில் இருந்து கேள்விகள் எழுப்புவது, மூன்று இலக்க எண்களைக் கூட்டல், கழித்தல் செய்வது ஆகியவை கேட்கப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு கணிதக் கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் குறித்த அறிவு முதலானவை சோதனை செய்யப்பட்டுள்ளன.