Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டம் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கம்: 13 லட்சம் பேருக்கு பயிற்சி- முதல்வர் ஸ்டாலின்
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள திறன் சாதனை கண்காட்சியை திறந்து வைத்து, “நான் முதல்வன்" திட்டத்தை பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விரிவுப்படுத்தி, “நான் முதல்வன்” நிரலோட்ட இணைய தளம் (Hackathon), காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் ஒரு புதிய இளங்கலை தொழிற்கல்வி பட்டப்படிப்பு, கலைஞர் 100 இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, ஒன்றிய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
உயர் கல்வியில் அடியெடுத்து வைக்கும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும், இன்றைய தொழில் துறைக்கு தேவையான நவீன திறன்களை கற்றுணர்ந்து அவர்களது துறைகளில் வெற்றி பெற ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சரால் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான திட்டம் “நான் முதல்வன்” திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம், கல்லூரி மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வாயிலாக Data Engineering, Genomic Mastery, PCR Technology, Plant Tissue Culture, Algal Technology, Graphic டிசைன், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், Cloud Computing, Industry 4.0, சைபர் பாதுகாப்பு, பெருந்தரவு ஆய்வு, Virtual Reality, பிளாக்செயின் டெவலப்மன்ட்), Sustainable Building Design, செயற்கை அறிவு தொழில் நுட்பத்தின் உன்னத வடிவமான சாட் ஜிபிடி, 5ஜி தொழில்நுட்பம் போன்ற நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் தொடங்கப்பட்டது. தொடங்கி ஓராண்டிலேயே பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து “நான் முதல்வன்” திட்டம் சாதனை புரிந்துள்ளது.
13 லட்சம் பேருக்குப் பயிற்சி
இந்த திட்டத்தின் மூலம், 2022-2023 ஆம் கல்வியாண்டில் பொறியியல், கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி முடித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,14,519 ஆகும். இவற்றுள் இறுதியாண்டு பொறியியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 85,053 மாணவர்களில் 65,034 மாணவர்களும் இறுதியாண்டு கலை பற்றும் அறிவியல் பட்டப்படிப்பினை முடித்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்திருந்த 99,230 மாணவர்களில் 83,223 மாணவர்களும் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
இவற்றுள் “நான் முதல்வன்” திட்டத்திற்கென்று பிரத்தியேகமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளில் 20,082 மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 5,844, என மொத்தம் 25,926 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழில்திறனை வெளிப்படுத்தும், தொழில் நுட்ப வடிவமைப்புகளை காட்சிப்படுத்தும் திறன் சாதனை கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கம்
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தொழிற்கல்வி மாணவர்களின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு, பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத்துறை நிர்வாகத்தில் மக்கள் சேவையில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மாணவர்களின் படைப்பாற்றலையும் புத்தாக்க திறனையும் ஊக்குவிக்கும் வகையிலும் “நான் முதல்வன்'' நிரலோட்ட இணைய தளம் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர், இளங்கலை தொழில் கல்வியை முன்னெடுத்து தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இளங்கலை தொழிற்கல்வி என்ற ஒரு புதிய பட்டப்படிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, பல்துறை வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பல்துறை சாதனைகளை ஆவணப்படுத்தி நினைவு கூறும் விதமாக “கலைஞர் 100” இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர், மத்திய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரித்து வெற்றி பெறச் செயயும் நோக்கிலும், இப்போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பொருளாதார ரீதியாக உள்ள தடைகளை நீக்கவும், குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக, தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். இதில் விக்னேஷ் குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று ஊக்கத்தொகை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.