பள்ளி வேலை நேரம் மாற்றமா? அங்கன்வாடி எல்கேஜி, யூகேஜி மூடலா?- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுமா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்படுகிறதா என்பது பற்றியும் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுமா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான கல்வி குறித்த கருத்தரங்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 12ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.
அதற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''மாணவர்கள் விடலைப் பருவத்துக்கு வரும்போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. அவர்களின் கற்றல் இடைவெளி, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றை எப்படிப் போக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனாவால் ஏற்பட்ட சமூக - பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? அவர்களால் பள்ளிப் படிப்பைப் பிரச்சினையின்றித் தொடர முடியுமா? ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அவை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கப்படும்.
காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காகப் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அங்குள்ள வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். வகுப்புகளை ஐசிடிஎஸ் துறைக்கு மாற்றி இருக்கிறோமே தவிர, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட மாட்டோம்.
தேர்வுகள் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2300-க்கும் மேற்பட்ட நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டால், எந்தத் தனியார் பள்ளியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தேர்வுகள் முடிந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அதேபோல நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.