NEET Exam: மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி; நீட் தேர்வு மாயை தகர்ந்தது- ராமதாஸ் பெருமிதம்
மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதனால் நீட் தேர்வு மாயை தகர்ந்ததாகவும் ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதனால் நீட் தேர்வு மாயை தகர்ந்ததாகவும் ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
’’அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வுகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினரும், பிற மாணவர்களில் 85 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
ஒப்பீட்டளவில் நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், குறைந்த மதிப்பெண் எடுத்து 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. 10% பெரிய வித்தியாசமல்ல!
7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களால் மருத்துவ படிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று எழுப்பப்பட்ட ஐயங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். வாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்பட்டால் தங்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்! நீட்டில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருத்துவத் தேர்வுகளில் வெல்ல முடியும்; இட ஒதுக்கீடு கல்வித் தரத்தை குறைத்து விடும் ஆகிய மாயைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர். வாழ்த்துகள்! சமூக நீதி வெல்லட்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இந்த நீட் தேர்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான சட்டத்தையும் இயற்றியது.
பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை போன்ற அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ’தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்விற்கு பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் குறைவு’ என்று கூறி, சட்டம் இயற்றப்பட்டது.
நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டில், 17.64 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் மொத்தமாக 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.