"வதந்திகளை நம்பாதீங்க மாணவர்களே" - அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு
அம்பேத்கர் அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு விளக்கம்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக சமூகநீதித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூகநீதித் துறை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
* இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.
* மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர்.
* சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில்
* இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
* மீதம் 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
* 25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
* மாணவர்கள் வெளிநாடு புறப்படும் முன் விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக்கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவுகிறது. இதற்காக, நடப்பு ஆண்டில் தேர்வான மாணவர்களுக்கு தாட்கோ (TAHDCO) மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலிருந்து தாட்கோவிற்கு ஈடுசெய்யப்படும்.
கல்வி உதவித்தொகை வழங்கும் முறை:
* கல்விக் கட்டணம் பல்கலைக்கழகக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது.
* மொத்த ₹36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.
* அனைத்து உதவித்தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் வாயிலாக செயலாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















