அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் மருத்துவப் படிப்பு - அசத்தும் தமிழினி துணைவன் அமைப்பு
“தமிழினி துணைவன்” மூத்த பேராசிரியர்கள் 350 மாணவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்கள் அனைவருக்கும் தங்கள் சேவையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழில் மருத்துவப் பாடங்களை தமிழினி துணைவன் அமைப்பு ஆன்லைனில் நடத்தி வருகிறது.
தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டுள்ள மருத்துவக் குழுவினர் மற்றும் பல்வேறு துறையினர் இணைந்து தமிழினி புலனம் என்ற வாட்ஸ்அப் குழுவை 2019ல் உருவாக்கினர். தமிழ் மொழி வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் இந்த வாட்ஸ்அப் குழு, மருத்துவ மாணவர்களுக்கு உதவுவதற்காக நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தமிழினி துணைவன் என்ற அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக்கல்லூரிகளில் பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, வாரந்தோறும் 3 நாட்கள் தமிழில் இணையவழியில் மருத்துவப் பாடங்களை நடத்தி வருகிறது. இதன்படி நடப்பாண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பு ஆசிரியர் தினமான இன்று 5 தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக 'தமிழினி துணைவன்' அமைப்பின் நிறுவனரும், அரசு மருத்துவருமான சுபாஷ் காந்தி கூறியதாவது:
அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ - மாணவிகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் மருத்துவப் பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கட்டணமின்றி வாட்ஸ் அப் குழு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை முதலாமாண்டு வகுப்புகள் பேராசிரியர்கள் ரூபா ஸ்ரீ, செந்தில் குமார், திருமாறன், சூர்யா ஒருங்கிணைப்பில் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மருத்துவ பாடங்களான உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பாடங்களில் இது வரை 200க்கும் மேற்பட்ட வகுப்புகள் தமிழில் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், மனநல ஆலோசனை வகுப்பும் நடத்தப்படுகிறது. சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் நிலையில், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு தங்கப்பதக்கம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு இடஒதுக்கீட்டில் 2023 - 2024ம் கல்வி ஆண்டில் மருந்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் செப்டம்பர் 5ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. ‘தமிழினி துணைவன்' அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் இணைய 78458 49867 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
“தமிழினி துணைவன்” வாட்ஸ்அப் மற்றும் கூகுள் மீட் மூலம் மருத்துவ கற்பித்தல் திட்டத்தை இயக்குகிறது. மேலும், தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 48 மூத்த மருத்துவப் பேராசிரியர்கள் இதற்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அவர்களில் சிலர் மாநில மருத்துவக் கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளனர். உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகிய மூன்று துறைகள், ஓய்வுபெற்ற மூன்று மருத்துவர்களால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ்.,இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு சுமார் 491 மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவக் கல்விக்காகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், “தமிழினி துணைவன்” மூத்த பேராசிரியர்கள் 350 மாணவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்கள் அனைவருக்கும் தங்கள் சேவையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.