(Source: Poll of Polls)
MBBS Admission: மாணவர்களே… இன்று முதல் ஆக.8 வரை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்- எப்படி?
MBBS Admission 2024: அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, இன்று (செப்.31) முதல் ஆக.8 வரை விண்ணப்பிக்கலாம். எப்படி? காணலாம்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன. இங்கு மொத்தத்தில் சுமார் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதியதில், 89,198 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.inஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை மாலை 5 மணிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
கலந்தாய்வுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அரசு ஒதுக்கீட்டுக்கு பொதுப் பிரிவுக்கான கட்டணம் ஆகும். இது எஸ்சி/ எஸ்சி அருந்ததியர்/ எஸ்டி மாணவர்களுக்குப் பொருந்தாது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும்.
வைப்புத் தொகை
அதேபோல அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வைப்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை. எனினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வைப்புத் தொகையாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 30 ஆயிரம் கட்ட வேண்டும். இது நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.1 லட்சமாக உள்ளது. இது எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.
வயது வரம்பு
சேர்க்கையின்போதே அல்லது டிசம்பர் 31, 2024 தேதியிலோ விண்ணப்பதாரருக்கு 17 வயது முடிந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முன்
விண்ணப்பிப்பதற்கு முன்னர் மாணவர்கள் https://tnmedicalselection.net/news/30072024214322.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டிகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- அறிவிக்கையைப் படித்த பிறகு, மாணவர்கள் https://reg24.tnmedicalonline.co.in/mbbs//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- இதில் புதிதாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- அதிலேயே விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து தேவையான தகவல்களைப் பதிவுசெய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, உறுதிசெய்து கொள்ளலாம்.
சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046
கூடுதல் தகவல்களுக்கு: www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in






















