எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!
மயிலாடுதுறை அருகே பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டித்தர பெற்றோர்கள் அரசுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மேற்கூறை பெயர்ந்து விழும் பழைய பள்ளி கட்டிடத்தை மழைக்காலத்திற்குள் இடித்து விட்டு புதிய வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வித்துறைக்கு அதிக நிதி
தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அவைகள் முறையாக சென்று சேருகிறதா? என்றால் அது கேள்வி குறியாக தான் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதற்கு உதாரணமாக ஏராளமான பள்ளிகளில் போதிய அளவில் கட்டிடம் இல்லாமலும், பல கட்டங்கள் பழுதடைந்தும் இருப்பதே உதாரணம். இருத்த போதிலும் கடந்த பட்ஜெடில் கூட பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி
28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும். 15000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி என பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 44,042 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டு செய்தது. பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு. (2023-24 பட்ஜெட் ரூ.40,299 கோடி, 2024-25 பட்ஜெட் ரூ.44,042 கோடி செய்யப்பட்டது.
Anbumani: பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்; வேடிக்கை பார்க்கும் அரசு- அன்புமணி கண்டனம்
ஆபத்தான பள்ளி கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் மேலபாண்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்கள் அமர்ந்து பயிலும் வகுப்பறை கட்டம் கடந்த 63 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும். ஆகையால் அந்த கட்டிடத்தை கடந்த 2013 - 2014 காலகட்டத்தில் அரசால் பேட்ச் ஒர்க் எனப்படும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மேற்புற காங்கிரட் மேற்கூற காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்தளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தில் தான் தற்போது மாணவர்கள் அமர்ந்து பெரும் அபாயத்திற்கு நடுவில் கல்வி பயின்று வருகின்றனர்.
பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சமீபத்தில் மேற்புற காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே அடுத்து வரக்கூடிய நாட்களும் மழைக்காலம் என்பதால் இக்கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு சான்றிதழ் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே மாணவர்களை தற்காலிகமாக வேறு பகுதிக்கு மாற்றி, கட்டிடத்தை இடித்து தரம் உயர்த்தப்பட்ட புதிய பள்ளி கட்டிடமாக கட்டித் தர வேண்டும் என முன்னாள் மாணவர்களும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.