DPI Campus: பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்: டிபிஐ வளாகத்துக்குப் புதுப்பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகனின் பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சூட்டினார்.
பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகனின் பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சூட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் இன்று (டிசம்பர் 19) கலந்துகொண்டார். இதில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. அத்துடன் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவையும் முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து டிபிஐ வளாகத்துக்கு ’பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்பட்டதுhttps://t.co/wupaoCQKa2 | #DMK #Anbazhagan #MKStalin pic.twitter.com/pZaG6LEo3g
— ABP Nadu (@abpnadu) December 19, 2022
முன்னதாக கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் புதிய திட்டம்
அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களும் அரசும் இணையும் இந்த முன்னெடுப்பு ’நம்ம ஸ்கூல்’ திட்டம் என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.
நிகழ்வில் பேசிய வேணு சீனிவாசன், “நம்மில் பெரும்பாலானோருக்கு, பள்ளி நினைவுகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வை அளிப்பவை. குடும்பத்தாரோடு இருப்பதைப் போலவே பள்ளியுடனான உறவு பின்னிப் பிணைந்ததாக இருக்கும். நமது வேர்களுடன் மீண்டும் இணைவது என்பது உலகமெங்கும் புலம் பெயர்ந்துள்ள நமது தமிழ் மக்களுக்கான ஆழமான உணர்வாகும். நமது பள்ளிகளிடமிருந்து நாம் பெற்றதை நன்றியுடன் திருப்பித் தர, நமது வேர்களை மீண்டும் கண்டறிய நம்ம ஸ்கூல் திட்டம் உதவும்” என்று தெரிவித்தார்
நிகழ்ச்சியின்போது, அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநின்ற உள்ளூர்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மரியாதை செய்து பாராட்டினார். கோயம்புத்தூர் அருகே சூலூரில் தான் பயின்ற அரசுப் பள்ளியை தனது வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தத்தெடுத்து மேம்படுத்திய திரைக் கலைஞர் சிவக்குமார் மரியாதை செய்யப்பட்டு பாராட்டப்பட்டவர்களில் ஒருவர்.
திமுக ஆட்சிக் காலத்தில், பேராசிரியர் க.அன்பழகன் முன்னாள் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.