JEE Mains Result 2023: அப்படிபோடு...! வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்: மாணவிகளை பின்னுக்கு தள்ளிய மாணவர்கள்!
பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு (2023) முடிவுகளை இன்று தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு (2023) முடிவுகளை இன்று தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக, முதல் 20 இடங்களில் ஒரு இடத்தைக் கூட மாணவிகள் கைப்பற்றவில்லை. அதேபோல இரட்டையரான மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூரைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் நிபுன் மற்றும் நிகுஞ்ச் கோயல் ஆகியோர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது.
இதற்கிடையே முதல் அமர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஜனவரி 14 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொண்டனர்.
இந்தத் தேர்வின் முதலாம் தாளை எழுத 860064 பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் தாளை எழுத 46465 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.84 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். கடந்த முறை 7.69 லட்சம் பேர் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டில் 8.23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது 95.8% பேர் அதிகபட்சமாக இந்த முறை தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகளில் 20 தேர்வர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதில், 14 மாணவர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 பேர் ஓபிசி க்ரீமி லேயர் அல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். தலா ஒரு மாணவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர் ஆவர்.
ஆச்சர்யப்படுத்தும் விதமாக, முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களில் மாணவி ஒருவர் கூட இல்லை. அதற்கு அடுத்தபடியாக 2 மாணவிகள் 99.99 பர்சண்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவது அமர்வு எப்போது?
இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இந்த அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தர வரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
95.8% பேர் எழுதிய தேர்வு
இதற்கிடையே ஜேஇஇ இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) தொடங்கியுள்ளது. மாணவர்கள் இதற்கு மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.