![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
'Pudumaippen' : புதுமைப்பெண் திட்டம்.. 2 லட்சம் மாணவிகள்.. பயனடையத் தேவையான தகுதி விவரங்கள் இதோ
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண்' திட்டமானது, மாணவியர், கல்விக்கு ஊக்கமளிப்பதுடன், வரும் காலங்களில் யாரும் மறுக்க முடியாத பெரும் பயன்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
!['Pudumaippen' : புதுமைப்பெண் திட்டம்.. 2 லட்சம் மாணவிகள்.. பயனடையத் தேவையான தகுதி விவரங்கள் இதோ It has been reported that the 'Pudumaippen' program implemented by the Tamil Nadu government will encourage students and education and will bring great benefits 'Pudumaippen' : புதுமைப்பெண் திட்டம்.. 2 லட்சம் மாணவிகள்.. பயனடையத் தேவையான தகுதி விவரங்கள் இதோ](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2017/02/26175412/indians_students_in_usa.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய தேவையான தகுதி விவரங்கள் :-
- 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம்
- அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும், இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.
- இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்,
- முதன் முதலில் இளநிலை படிப்பில், கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ITI, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, அப்படிப்பு முடியும் வரை உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
- கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு முதல் மூன்று ஆண்டுகளும் தொழிற்படிப்புகளில் பொறியியல் படிப்பிற்கு முதல் நான்கு ஆண்டுகளும், மருத்துவக் கல்வியில் முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.
- ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
- கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
- அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
- ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் (https://www.pudhumaipenn.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும்.
திட்டத்தின் நோக்கம்
- பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
- குழந்தை திருமணத்தை தடுத்தல்
- குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்,
- பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்
- பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
- உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளைஅதிகரித்தல்.
- பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி "புதுமைப் பெண் திட்டம் முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று முதல் கட்டமாகவும், 08.02.2023 அன்று 2-ஆம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் சுமார் 1,16,260 மாணவிகளும், இரண்டாம் கட்டமாக 93,105 மாணவிகளும் பயனடைந்த வகையில் ரூ. 100.11 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கு ரூ.349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டதில், நாளது வரை ரூ.60.86 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 2,11,506 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். ஆக இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் நாளது வரை இத்திட்டத்திற்கென ரூ. 160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண்' திட்டமானது, மாணவியர், கல்விக்கு ஊக்கமளிப்பதுடன், வரும் காலங்களில் யாரும் மறுக்க முடியாத பெரும் பயன்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)