பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலைநிறுத்தம்; முஷ்டியை முறுக்கும் அரசு ஊழியர்கள் சங்கம்!
நாளை ஜாக்டோ ஜியோ பாராட்டு மாநாடு நடத்த உள்ள நிலையில், ஆக்டோ ஜியோ போராட்டத்தை அறிவித்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 03.02.2026 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஆக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
ஆக்டோ ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு மாநில தலைமை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ஜன.3-ம் தேதி அறிவித்தது. இதன்படி கடைசியாக வாங்கும் ஊதியத்தில் இருந்து, 50 சதவீத அளவுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் பெறும் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் இதற்கு அரசு ஊழியர் சங்கங்களில் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆக்டோ ஜியோ போராட்டத்தையே அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆக்டோ ஜியோ கூறும்போது, ’’தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதி எண்: 309-ன் படி CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக. பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்- தேர்தல் கால வாக்குறுதி எண் 311-ன்படி சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க
தேர்தல் வாக்குறுதி எண்: 311-ன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி எண்.181- பகுதிநேர ஊதிய முரண்பாடுகளைக் சிறப்பாசிரியர்களை பணி ரந்தரம் செய்ய வேண்டும்.
50 ஆயிரம் ஆசிரியர்களின் 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 03.02.2026 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜாக்டோ ஜியோ பாராட்டு மாநாடு நடத்த உள்ள நிலையில், ஆக்டோ ஜியோ போராட்டத்தை அறிவித்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
























