இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
Nan Mudhalvan Scheme for Paramedical Courses: நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள்துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
’’தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புக் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத் திறன் மையம் உருவாக்கப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கீழ் அமைக்கப்படும் மாவட்ட திறன் மையத்தில், நான் முதல்வன் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு திறன் மேம்பாட்டு அலுவலர், இளம் வல்லுநர்கள் மற்றும்இல்லம் தேடி கல்வித் திட்டத் தன்னார்வலர்கள் கொண்ட சூழு செயல்படும். இதேபோன்று தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு மாவட்ட திட்ட அலுவலர், இளம் வல்லுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத் தன்னார்வலர்கள் கொண்ட குழு செயல்படும்.
அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும்.
அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு தலா ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் கீழ் செயல்படும்.
வேலைவாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு திறன் ஓலைகள் (Skill vouchers) மற்றும் (Internship) வழங்கும் திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள் 100 கோடி ரூபாய் மதிப்பிட்டில் செயல்படுத்தப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக, கல்லூரி பட்டப்படிப்பை முடித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் பட்டப்படிப்பு, தனித் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு "திறன் தமிழ்நாடு- நிறைப் பள்ளிகள்" என்ற மாபெரும் திட்டம்துவங்கப்படும். பயிற்சியின் முடிவில் பணியிடப் பயிற்சிமற்றும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும்.
சர்வதேச சான்றிதம் மற்றும் தொழில் துறை அங்கீகாரத்துடன் திறன் அடிப்படையிலான படிப்புகளை வழங்கச் சிறந்த நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு முழு மற்றும் பகுதி அளவு மானியத்துடன் கூடிய திறன் ஓலைகளை வழங்கும். பின்தங்கிய இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் திறன் ஊக்கத் தொகையினையும் வழங்கும்.
நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கான நான் முதல்வன் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நான் முதல்வன் திறன் அடிப்படையிலான படிப்புகள் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் முலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர சிகரம் தொடு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.