No Bag Day: புதுச்சேரியில் நோ பேக் டே.. புத்தகப்பையின்றி பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்..
புதுச்சேரியில் நோ பேக் டே முன்னிட்டு பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகப்பையின்றி வருகின்றனர்.
பள்ளி புத்தகப்பை திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2020 ஆம் வெளியிட்டது. இதன்படி ஆண்டிற்கு குறைந்தது 10 நாட்களாவது பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகப்பையின்றி வர வேண்டும். இந்த நாட்களில் கலை, வினாடி வினா, விளையாட்டு, கைவினை பொருட்கள் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சுட்டி காட்டி புதுச்சேரி கல்வி துறை இணை இயக்குனர் சிவகாமி கடந்த வாரம் சுற்றிக்கை ஒன்றினை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், ” இனி மாதத்தில் கடைசி வேலை நாள் புத்தக பை கிடையாது. அந்த கடைசி நாள் விடுமுறையில் வந்தால் அதற்கு முந்தைய நாளை புத்தக பை இல்லாத நாளாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அனைத்தை பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும், அறிவியல், கணக்கு, மொழி சார்ந்த வேலைகளை கொடுக்க வேண்டும், வினாடி வினா, கட்டுரை போட்டி, கலை, நுண்கலை பயிற்சி மற்றும் சமுதாய சேவையில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜூன் மாதம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும், மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் 2 நாட்களாவது சிறு தானிய உணவு வழங்க வேண்டும், மாதம் ஒரு நாள் புத்தகப்பையின்றி வர வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த வாரம் அனுப்பப்பட்டது. இன்று மாதத்தின் கடைசி வேலை நாள் என்பதால் புதுச்சேரியில் இன்று நோ பேக் டே அனுசரிக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் புத்தகப்பையின்றி பள்ளிகளுக்கு வந்துள்ளனர். கடந்த வாரம் சுற்றறிக்கை கொடுக்கப்பட்ட நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது. பள்ளிகளில் கைவினைப் பொருட்கள் செய்வது, விநாடி வினா, கதை சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், பிற விஷயங்களிளும் கவனம் செலுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நோ பேக் டே முன்னிட்டு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளிகளுக்கு வருகின்றனர்.