போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
ஒன்றிற்கு மேற்பட்ட பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே இந்த போட்டித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் - டிஆர்பி.

ஒரு தேர்வர் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை எழுத ஒரே ஒரு பாடத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து டிஆர்பி மேலும் கூறும்போது, ‘’அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது சார்ந்த அறிவிக்கை எண்.04/2025, நாள்.16.10.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள்
இந்த அறிக்கையில் தேர்வு நாள், கல்வித் தகுதிகள், தேர்வு முறை, தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கல்லூரிக் கல்வி ஆணையரகத்திடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின் அடிப்படையிலும், இவ்வறிவிக்கையில் பக்கம் எண்.16, பத்தி எண்.8(ix)லும் மற்றும் பக்கம் எண்.31, பத்தி எண்.18(f)லும் ஒரு பணிநாடுநர் ஒரே ஒரு பாடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் (The candidates should apply for only one subject) ஒன்றிற்கும் மேற்பட்ட பாடத்திற்கு பணிநாடுநர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது (The candidates will not be allowed to submit more than one application) எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பாடத்தில் மட்டுமே போட்டித் தேர்வை எழுத அனுமதி
இந்நிலையில், மேற்படி அறிவிக்கைக்கு மாறாக, ஒன்றிற்கு மேற்பட்ட பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே இந்த போட்டித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது’’ என்று ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் அறிவித்துள்ளார்.






















